விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 1 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நாணயங்கள், வெள்ளிப்பொருட்கள் சிக்கின.

Update: 2019-01-02 22:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விழுப்புரம் சுகாதார மாவட்டத்தில் 11 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 220 துணை சுகாதார மையங்கள், 4 நகர்புற சுகாதார நிலையங்களும், கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தில் 11 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 264 துணை சுகாதார மையங்கள், 2 நகர்புற சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

விழுப்புரத்தில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தாட்கோ அலுவலகத்தின் மேல்தளத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக டாக்டர் பாலுசாமி பணியாற்றி வருகிறார்.

இவர் ஆங்கில புத்தாண்டையொட்டி தனது சுகாதார மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களில் பணியாற்றி வரும் டாக்டர்கள், ஊழியர்களிடம் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மதியம் 12.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்போது அலுவலகத்தினுள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்களும் இருந்தனர். இவர்களை தவிர ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார மையத்தில் இருந்து வந்த டாக்டர்கள், ஊழியர்கள் என 25-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர வைத்து அலுவலக கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டிக்கொண்டு அதிரடி சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடங்கினர்.

அலுவலகத்தில் இருந்த பீரோக்கள், அலுவலர்களின் மேஜை அறைகள் ஆகியவற்றை திறந்து அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர். அதுமட்டுமின்றி ஏதேனும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனரா? என்று அலுவலக நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரியின் காரையும் மற்றும் ஊழியர்களின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் அலுவலர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார மையங்களில் இருந்து வந்திருந்த டாக்டர்கள், ஊழியர்கள் ஆகியோர் துணை இயக்குனருக்கு தங்க நாணயங்கள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை புத்தாண்டு பரிசாக கொடுக்க வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அந்த அலுவலகம் முழுவதையும் தீவிரமாக சோதனை செய்தனர். 5½ மணி நேரமாக நடந்த இந்த சோதனை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

சோதனையின்போது அந்த அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 1,000 மற்றும் 10 கிராம் எடை கொண்ட ஒரு தங்க நாணயம், 2 கிராம் எடை கொண்ட 6 தங்க நாணயங்கள் என 22 கிராம் தங்க நாணயங்களும், வெள்ளியினால் ஆன 92 கிராம் எடையுள்ள வேல், 26 கிராம் எடை கொண்ட விநாயகர் சிலை ஆகியவை சிக்கின. இவற்றுக்கு உரிய கணக்கு காட்ட முடியாததால் அவற்றை போலீசார் கைப்பற்றினர். அதோடு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம், பரிசு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார், லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள லஞ்சப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் கோர்ட்டு அனுமதி பெற்று விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் இதுவரை யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகையையும் மற்றும் என்னென்ன பரிசு பொருட்களை லஞ்சமாக பெற்றுள்ளனர் என்று விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முழுவதுமாக முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர். விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் பணம், பரிசு பொருட்கள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்