புத்தாண்டை முன்னிட்டு, 2 நாட்களில் ரூ.5.99 கோடிக்கு மதுபானம் விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.40 லட்சம் குறைவு

நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்கள் ரூ.5 கோடியே 99 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.40 லட்சம் குறைவு ஆகும்.

Update: 2019-01-02 22:30 GMT
நாமக்கல்,

சமீபகாலமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது முக்கிய இடம் பிடித்து வருகிறது. இதனால் புத்தாண்டை முன்னிட்டு மது விற்பனை அதிகரிப்பது வழக்கமாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் கடந்த 31-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த 2 நாட்களிலும் ரூ.5 கோடியே 99 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

சாதாரண நாட்களில் சுமார் ரூ.2 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகும். ஆனால் கடந்த 31-ந் தேதி 5,048 பெட்டிகள் மதுபானம், 3,537 பெட்டிகள் பீர் வகைகள் விற்பனையானது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 33 லட்சம் ஆகும்.

இதேபோல் நேற்று முன்தினம் 4,149 பெட்டிகள் மதுபானம், 2,535 பெட்டிகள் பீர் வகைகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 66 லட்சம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு ரூ.6 கோடியே 39 லட்சத்துக்கு மதுபான வகைகள் விற்பனையாகின. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரூ.40 லட்சம் குறைவாக மது விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்