சிங்காநல்லூர் அருகே, ஏ.டி.எம். மையத்தில் தீ; 3 எந்திரங்கள் எரிந்து நாசம்

சிங்காநல்லூர் அருகே ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது.

Update: 2019-01-02 22:30 GMT
சிங்காநல்லூர், 

கோவை- திருச்சி ரோடு சிங்காநல்லூர் அம்பாள் தியேட்டர் எதிர்புறம் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் எடுப்பதற்காக 3 ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில் நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக 3 எந்திரங்கள் மீதும் பரவியது. ஏ.டி.எம். மையத்தில் எந்திரங்கள் தீப்பிடித்து எரிவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் பீளமேடு நிலைய அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 3 ஏ.டி.எம். எந்திரங்கள், அங்கிருந்த குளிரூட்டும் பெட்டி, யு.பி.எஸ். எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 3 ஏ.டி.எம். எந்திரங்கள் எரிந்து நாசமானது. எந்திரங்களில் மேல் பகுதி மட்டுமே முழுமையாக எரிந்ததால் உள்ள இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது, என்றார்.

மேலும் செய்திகள்