வாணியம்பாடி பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு வனத்துறையினர் 5 குழுவாக பிரிந்து தேடுகின்றனர்
வாணியம்பாடி பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து 5 குழுவினர் மயக்க ஊசியுடன் இரவு பகலாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம், ராஜாமணிவட்டம் கிராமங்களில் மாடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆந்திர வனப்பகுதியிலிருந்து தப்பி வந்த சிறுத்தை வயல்களுக்குள் பதுங்கி இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து மாடுகளை கொன்று வருகிறது. எந்த நேரத்திலும் பொதுமக்கள் மீது சிறுத்தை பாயலாம் என்பதால் இரவில் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாக கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
சிறுத்தைகளை பிடிப்பதற்காக அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட 4 கூண்டுகளை வயல் வெளிகளில் மாட்டிறைச்சியுடனும், நாய் மற்றும் கோழியை அதற்குள் கட்டிப்போட்டும் வைத்து அதில் சிக்கும் என நினைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
ஆனால் வனத்துறையினரை ஏமாற்றிவிட்டு கூண்டுக்குள் சிக்காமல் அதில் இருந்த மாட்டிறைச்சியை மட்டும் லாவகமாக தின்று விட்டு சிறுத்தை தப்பியது. சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தின் பிடியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இறைச்சியை தின்று விட்டு தப்பிய சிறுத்தையின் கால்தடங்களை சேகரிப்பதற்காக வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சேவாசிங், திருப்பத்தூர் மாவட்ட வன அதிகாரி முருகன் தலைமையில் வனத்துறையினர் வந்தனர்.
கூண்டில் மாட்டிறைச்சியை தின்று விட்டு தப்பிய சிறுத்தை ஏற்கனவே நடமாடும் 2 சிறுத்தைகளில் ஒன்றா? அல்லது புதிய சிறுத்தையா? என கண்டறிவதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு ராஜாமணிவட்டம் பகுதியில் சிறுத்தை கடித்து காயம் அடைந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டு உரிமையாளர் ரவியிடம் விசாரணை நடத்தினார்.
அதன்பின்னர் மண்டல வனப்பாதுகாவலர் நிருபர்களிடம் கூறுகையில், “வாணியம்பாடி பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட வன அதிகாரி முருகன் தலைமையில் 5 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் சிறுத்தையை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வனத்துறையினர் சிக்கனாங்குப்பம், ராஜாமணி வட்டம் உள்பட 15 கிராமங்களில் தனித்தனியாக சிறுத்தையை தேடி வருகின்றனர். சிறுத்தையை பிடிப்பதற்கு ஏற்கனவே இருந்த 4 இடங்களை தவிர கூடுதல் இடங்களில் கூண்டுகள் வைக்கப்படும்.
தேடுதல் குழுவினர் சிறுத்தையை கண்டால் மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை எடுப்பர். பொதுமக்களும், சிறுத்தையை கண்டால் அது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் கூண்டுகளை வேறு இடங்களில் நிறுவி, அந்த கூண்டு இருப்பது தெரியாமல் செடிகளை அதன் மீது போட்டு மறைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். எப்படியாவது சிறுத்தையை பிடித்து விடுவோம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.