பழமையான லோயர்பரேல் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்படுகிறது 18 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கும்
பழமையான லோயர் பரேல் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 18 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.;
மும்பை,
பழமையான லோயர் பரேல் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 18 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழுதடைந்த மேம்பாலம்
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள லோயர்பரேல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே 98 ஆண்டுகள் பழமையான டெலிஸ்லே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் 1921-ம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். கடந்த ஆண்டு ரெயில்வே, மாநகராட்சி, மும்பை ஐ.டி.டி. நடத்திய ஆய்வில் இந்த மேம்பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பாலம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அதிரடியாக மூடப்பட்டது. பாதசாரிகள் மட்டும் மேம்பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
18 மணி நேரம்...
இந்தநிலையில் பழுதடைந்த அந்த மேம்பாலத்தை இடித்து தள்ளுவதற்கான நடவடிக்கையை மேற்கு ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.
இதன்படி டெலிஸ்லே மேம்பாலம் வருகிற 20-ந்தேதியில் இருந்து 26-ந்தேதிக்குள் இடிக்கப்பட உள்ளதாக மேற்கு ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதன் காரணமாக மேம்பாலம் இடிக்கப்படும் தினத்தன்று மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 18 மணி நேரம் வரை தாதர்- சர்ச்கேட் இடையே ரெயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படும்.
விரார், போரிவிலியில் இருந்து வரும் ரெயில்கள் தாதரோடு நிறுத்தப்படும் என மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.