ஒரே மாதத்தில் 4-வது முறை: டாய் ரெயில் மீண்டும் தடம்புரண்டது சுற்றுலா பயணிகள் அச்சம்

நேரல்- மாதேரான் இடையே இயக்கப்படும் டாய் ரெயில் ஒரே மாதத்தில் 4-வது முறையாக மீண்டும் தடம்புரண்டது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-01-01 23:30 GMT
மும்பை,

நேரல்- மாதேரான் இடையே இயக்கப்படும் டாய் ரெயில் ஒரே மாதத்தில் 4-வது முறையாக மீண்டும் தடம்புரண்டது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாய் ரெயில்

ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான நேரல்- மாதேரான் இடையே மத்திய ரெயில்வே சார்பில் டாய் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இங்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் டாய் ரெயிலில் சவாரி செய்து எழில் கொஞ்சும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க தவறுவதில்லை.

பயணிகளை கவருவதற்காக கடந்த மாதம் மத்திய ரெயில்வே டாய் ரெயிலுடன் ஏ.சி. பெட்டியையும் இணைத்தது. ஆனால் அண்மைகாலமாக டாய் ரெயில் சவாரி சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்வத்தில் டாய் ரெயிலில் ஏறும் பயணிகளும் பீதியுடன் தான் பயணம் செய்கிறார்கள். அடிக்கடி டாய் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி வருவதே இதற்கு காரணமாகும்.

மீண்டும் தடம்புரண்டது

நேற்று முன்தினமும் டாய் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அமன்லாட்ஜில் இருந்து மாதேரான் வந்த போது, அதன் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கின.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டாய் ரெயில் 4-வது முறையாக தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பீதியை உண்டாக்கி உள்ளது. மேலும் பயணிகளின் பாதுகாப்பு மீதும், டாய் ரெயில் இயக்குவதற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அளித்த பாதுகாப்பு அனுமதி மீதும் கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்