2019 புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு
மும்பையில் பொதுமக்கள் 2019 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
மும்பை,
மும்பையில் பொதுமக்கள் 2019 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆங்கில புத்தாண்டு
மும்பையில் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் மாலை முதலே பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், கிர்காவ், ஜூகு, பாந்திரா, வெர்சோவா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திரண்டனர். இதுதவிர மும்பையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மதுபான விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நள்ளிரவு 12 மணி ஆனதும் மக்கள் இசை வாத்தியங்கள் இசைத்தும், நடனமாடியும், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கு, ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியும் மகிழ்ந்தனர்.
சிறப்பு வழிபாடு
2019 புத்தாண்டையொட்டி தாராவி நல்லமேய்ப்பன் ஆலயம் உள்பட மும்பையில் உள்ள தேவாலயங்களில் நடந்த நள்ளிரவு பிரார்த்தனையிலும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். பிர பாதேவி சித்தி விநாயக் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பொதுமக்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர்.
இதுதவிர மும்பை மகாலெட்சுமி கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் முருகன் கோவில் உள்ளிட்ட மும்பையில் உள்ள பிரபலமான கோவில்களில் நேற்று அதிகாலை முதலே புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் மும்பையில் புத்தாண்டு அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.