நாமக்கல்லில் ரூ.1.37 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தொடங்கி வைத்தனர்
நாமக்கல்லில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.;
நாமக்கல்,
நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பூமிபூஜையிடும் நிகழ்ச்சிகளும், முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சத்திரம் அருகே உள்ள புதன்சந்தையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.
பூமிபூஜை
அதைத்தொடர்ந்து நாமக்கல் நகராட்சி நிதியின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் நாமக்கல்-சேலம் ரோடு, முருகன் கோவிலில் இருந்து சின்னமுதலைப்பட்டி வரையிலான தார்சாலை அமைக்கும் பணியையும், நாமக்கல் - துறையூர் ரோட்டில் ரூ.1.37 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணியினையும் பூமிபூஜை செய்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதேபோல் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் துறையூர் ரோடு முதல் நாமக்கல் ரெயில் நிலையம் வரை அமைக்கப்பட்டு உள்ள சாலையையும், நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதத்தில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டட பொய்யேரிக்கரை இணைப்பு சாலையையும் மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் பள்ளிவாசல் தெருவில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கினையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.