புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
2018-ம் ஆண்டு நிறைவடைந்து 2019-ம் ஆண்டு நேற்று பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தன. கிருஷ்ணகிரியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், சந்திரமவுலீஸ்வரர் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புதுப்பேட்டையில் உள்ள கிருஷ்ணன் கோவில், வேணுகோபாலசாமி கோவில், அய்யப்பன் கோவில் என அனைத்து கோவில்களிலும் அதிகாலையில் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கெலமங்கலம்
புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி அணை பூங்கா, சிறுவர் பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. சிறுவர், சிறுமிகள் மகிழ்ச்சியுடன் காலை முதல் மாலை வரை விளையாடினார்கள். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் காவல் துறை சார்பில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சரியாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம் அருகே உள்ள வசப்புறத்தில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
தேன்கனிக்கோட்டை
புத்தாண்டையொட்டி தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், பட்டு, மகாலிங்கம் மற்றும் போலீசார், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், வாகன ஓட்டிகள் குடிப்போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரூர் பழையபேட்டையில் உள்ள கரியபெருமாள் கோவிலில் புத்தாண்டு மற்றும் 24-ம் ஆண்டு திருப்பதி நடைபயணம் தொடக்கத்தை யொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.