மாநில அந்தஸ்து கோரிக்கை பிசுபிசுத்து உள்ளது - அன்பழகன் எம்.எல்.ஏ.
மாநில அந்தஸ்து கோரிக்கை பிசுபிசுத்துவிட்டது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அரசுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதமே டெண்டர்விட்டுள்ளனர். கடந்த 10 மாதத்துக்கு முன்பே இதற்கு டெண்டர் விடவேண்டிய அவசியம் என்ன?
இந்த டெண்டரிலும் ஒரே ஒருவர்தான் கலந்துகொண்டு எடுத்துள்ளார். ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் மறுடெண்டர் விடாதது ஏன்? இதுதொடர்பாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முதல்–அமைச்சரின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இல்லை. சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தனியாருக்கு அனுமதி அளித்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்கிறார். பாப்ஸ்கோ தலைவர் தனவேலு முதல்–அமைச்சரின் வீட்டை முற்றுகையிட ஊழியர்களை அழைத்து வருகிறார்.
பிளாஸ்டிக் தடை விஷயத்தில் புதுவை அரசின் நிலைப்பாடு என்ன? இங்கு பிளாஸ்டிக்கை தடை செய்யாவிட்டால் புதுவை கடத்தல் மாநிலம் ஆகிவிடும். இந்த விஷயத்தில் கவர்னர் என்ன செய்யப்போகிறார்? கவர்னரின் நடவடிக்கையினால் இன்னும் 3 மாதத்தில் சுதேசி மில் பகுதியில் உள்ள காடு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறப்போகிறது.
கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து மக்களுக்கு பொங்கல் இலவச பொருட்கள் வழங்கவேண்டும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்–அமைச்சரின் அணுகுமுறை தோல்வியில் முடியப்போகிறது. அவர் இதை அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகி ஒன்றுமில்லாமல் செய்யப்போகிறார். அவரது குறுகிய கண்ணோட்டத்தால் மாநில அந்தஸ்து கோரிக்கை பிசுபிசுத்துள்ளது.
ஆட்சி நடத்த தெரியாத முதல்–அமைச்சராக நாராயணசாமி உள்ளார். அவர் ஒரு பெண்ணான கவர்னர் கிரண்பெடியிடம் தோற்கிறார். மாநிலத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. புதுவை மக்களை சுற்றுலா என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.