சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் ஆராய்ச்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் ஆராய்ச்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-01-01 22:30 GMT
அடையாறு,

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி) பயின்று வந்தவர் ரஞ்சன குமாரி (வயது 25). அவர் ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் தங்கி இருந்தார்.

ரஞ்சன குமாரி தங்கி இருந்து விடுதி அறைக்கு நேற்று மாலை சக மாணவிகள் சிலர் சென்றனர். அப்போது அங்கு ரஞ்சன குமாரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு மாணவிகள் தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ரஞ்சன குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்