கம்பம், கூடலூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனை - 15 பேருக்கு அபராதம்
கம்பம், கூடலூர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கம்பம்,
கம்பம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதையடுத்து நகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதார அலுவலர் சுருளிநாதன், நகராட்சி மேலாளர் முனிராஜ், வருவாய் ஆய்வாளர் முத்தமிழ், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் 3 குழுக்களாக பிரிந்து வேலப்பர் கோவில் தெரு, பார்க்ரோடு, ஓடைக்கரைதெரு, பழைய பஸ்நிலையம், போக்குவரத்து சிக்னல், அரசமரம், காந்திசிலை, எல்.எப்.மெயின்ரோடு, கம்பம்மெட்டுரோடு, உழவர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் தடையை மீறி பாலித்தீன் பைகள் விற்பனைக்கு வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 100 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சங்கரன் கூறுகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் அபராதம் விதிப்பது மட்டுமின்றி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றார்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் நகராட்சி என்ஜினீயர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பரமசிவம், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார உதவியாளர்கள் குமார், தினேஷ் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். மேலும் பாலித்தீன் பைகள் விற்ற 4 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
போடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து சோதனை செய்ய போடி தாசில்தார் ஆர்த்தி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை சேர்ந்த நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன், நகர்நல அலுவலர் ராகவன், துணை தாசில்தார்கள் முருகன், ராமராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், செல்வராஜ், முத்துச்செல்வம் ஆகியோர் போடி நகர் முழுவதும் கடைகளில் சோதனை செய்தனர்.
இதில் பல்வேறு கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள், தட்டுகள் போன்றவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தாலோ, பயன்படுத்தினாலோ பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
வீரபாண்டியில் உள்ள கடைகளில் நேற்று பேரூராட்சி செயல்அலுவலர் செந்தில்குமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் 5 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.