புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறல்: 1,117 பேர் மீது வழக்கு
மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 1,117 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மதுரை,
மதுரையில் 2019–ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் இரவு நகர் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர் முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நகரின் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலைய பகுதி, கோரிப்பாளையம், அண்ணாநகர், ஆரப்பாளையம், காளவாசல், தல்லாகுளம், செல்லூர், புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையும் மேற்கொண்டனர்.
இதற்கிடையே போலீசார் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. வாகனத்தில் அதிவேகத்தில் செல்லக்கூடாது. அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். 2 பேருக்கு மேல் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். அதனை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரை போலீசார் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது போலீசார் உத்தரவை மீறி இளைஞர்கள் பலர் வாகனங்களில் அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும், ஹெல்மெட் இல்லாமல் சென்றனர். காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாமல் அதிவேகமாகவும், செல்போன் பேசியபடியும் சென்றனர். அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
அதன்படி மதுரை நகரில் விதிமீறல்களில் ஈடுபட்ட 1,117 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது. இதுதவிர பொது இடங்களில் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட சிலரை போலீசார் பிடித்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.