வடகர்நாடக மாவட்டங்களை இணைத்து தனிமாநிலம் கோரி கொடியேற்றி போராட்டம் பாகல்கோட்டை அருகே பரபரப்பு
பாகல்கோட்டை அருகே நேற்று வடகர்நாடக மாவட்டங்களை இணைத்து தனிமாநிலம் உருவாக்க கோரி கொடியேற்றியதால் பரபரப்பு உருவானது.
பெங்களூரு,
பாகல்கோட்டை அருகே நேற்று வடகர்நாடக மாவட்டங்களை இணைத்து தனிமாநிலம் உருவாக்க கோரி கொடியேற்றியதால் பரபரப்பு உருவானது.
தனிமாநில கோரிக்கை
கர்நாடகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, பீதர், பல்லாரி, கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், கதக், தார்வார், ஹாவேரி மற்றும் கொப்பல் ஆகியவை வடகர்நாடக மாவட்டங்களாக உள்ளன. இந்த நிலையில், கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வடகர்நாடக மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் செய்வது இல்லை எனவும், அந்த மாவட்டங் களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியலில் உரிய அங்கீகாரம் அளிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த குற்றச்சாட்டு தற்போதைய ஆட்சியிலும் நீடிக்கிறது. இதையடுத்து சமீபத்தில் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய மந்திரிகளாக பொறுப்பு ஏற்ற 8 பேரில் 7 பேர் வடகர்நாடகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது அந்த மாவட்ட மக்களுக்கு சமாதானத்தை கொடுத்தாலும் கூட பல ஆண்டுகளாக வடகர்நாடக மாவட்டங்களை சேர்த்து தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம், முழு அடைப்பு என்று பல்வேறு வகையில் போராடி வரும் அவர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடியேற்றி போராட்டம்
அதாவது, ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று பாகல்கோட்டை மாவட்டம் முதோல் டவுனில் வடகர்நாடக போராட்ட சமீதி சார்பில் தனிமாநிலம் கோரி போராட்டம் நடந்தது. அப்போது, வடகர்நாடக மாவட்டங்களை சேர்த்து தனிமாநிலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், அவர்கள் வடகர்நாடகத்துக்காக வடிவமைத்து வைத்து இருந்த கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தனர். அந்த கொடியில் காவி, மஞ்சள், பச்சை வண்ணங்கள் இருந்தன. மத்தியில் உள்ள மஞ்சள் வண்ணத்தில் வடகர்நாடக மாவட்டங்களின் வரைபடம் நீல வண்ணத்தில் இடம்பெற்றிருந்தது.
அரசுகள் அங்கீகாரம் வழங்க...
இந்த போராட்டத்தின்போது வடகர்நாடக போராட்ட சமீதியின் பொதுச்செயலாளர் நாகேஷ் பேசுகையில், ‘வடகர்நாடக மாவட்டங்களை தனிமாநிலமாக்க வேண்டும். இதற்கு கர்நாடக அரசும், மத்திய அரசும் அங்கீகாரம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துகிறோம். இதுபற்றி வடகர்நாடக மாவட்டங்களில் உள்ள மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களின் வீடுகளிலும் இந்த கொடியை கட்டி பறக்க செய்வோம்’ என்றார்.
முன்னதாக, கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் 23-ந் தேதி வடகர்நாடக போராட்ட சமீதி சார்பில் நடந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், புத்தாண்டு தினத்தில் வடகர்நாடக தனிமாநில போராட்டத்தை கொடியேற்றத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதன்படி, அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நேற்று கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.