தினமும் இரவில் 12 மணி நேரம் திம்பம் மலைப்பாதையில் லாரிகள் செல்ல தடை; நேற்று முதல் அமலுக்கு வந்தது

திம்பம் மலைப்பாதையில் தினமும் இரவில் 12 மணி நேரம் லாரிகள் செல்வதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Update: 2019-01-01 22:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்– பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மலைப்பாதை குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும்.

எனவே கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்லும் போது அங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் தொடர்கதையாகி வந்தது. இதன்காரணமாக இந்த மலைப்பாதையில் அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

எனவே திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை செல்ல அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் ஆகியோர் திம்பம் மலைப்பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை இரவில் 12 மணி நேரம் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் 12 சக்கரங்கள் மற்றும் அதற்கு மேலும் சக்கரங்கள் உடைய லாரிகள் செல்ல நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது. ஆனால் சுற்றுலா வேன், சரக்கு ஆட்டோ, சரக்கு வேன், பஸ், கார், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. இதன்காரணமாக பண்ணாரி சோதனை சாவடி மற்றும் ஆசனூர் சோதனை சாவடியில் லாரிகள் நீண்ட வரிசையில் நின்றன.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு பிறகு இரவில் 12 மணி நேரம் திம்பம் மலைப்பாதையில் லாரிகள் செல்ல தடை விதித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு குறையும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்