தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 287 பேர் பலி - போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 287 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

Update: 2019-01-01 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் மனமாற்றம் காரணமாகவும், சாலை விதிகளை கடைபிடிப்பதாலும் சாலை விபத்துகள் குறைந்து உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 370 பேர் உயிர் இழந்தனர். 2018-ம் ஆண்டு உயிர் இழப்பு 287 ஆக குறைந்து உள்ளது. வாகன விபத்துகளை குறைக்க ஹெல்மட், சீட்பெல்ட் அணிய வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் 2018-ம் ஆண்டு சாலை விதிமுறைகளை மீறியதாக 2 லட்சத்து 80 ஆயிரத்து 927 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் ரூ.4 கோடியே 38 லட்சத்து 84 ஆயிரத்து 793 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 19 ஆயிரத்து 622 பேரின் ஓட்டுனர் உரிமம், போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 67 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2018-ம் ஆண்டு 59 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. குற்ற சம்பவங்களை பொறுத்தவரையில், 2017-ம் ஆண்டு 822 வழக்குகளும், 2018-ம் ஆண்டு 605 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

குற்ற வழக்குகளில் 2018-ம் ஆண்டு ரூ.1 கோடியே 30 லட்சத்து 13 ஆயிரத்து 512 மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் செயல்பாட்டை தடுக்கும் விதமாக இதுவரை 41 குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்