தாராபுரத்தில் நூற்பாலையில் திடீர் தீ விபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
தாராபுரத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ஞானவடிவேல். இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு சொந்தமான சிறிய நூற்பாலை தாராபுரம்– பழனி சாலை கணபதிபாளையம் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்பாலையில் வழக்கம் போல் 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இரவு 11 மணி அளவில் ஆலையில் இருந்த நூல்கள் தீயில் கருகும் வாடை அடித்துள்ளது. பணியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நூல் மூடைகளைப் புரட்டிப்போட்டு பார்த்துள்ளனர்.
அப்போது நூல் மூடைகளில் தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆலையின் உரிமையாளரான ஞானவடிவேலுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வருவதற்குள் நூற்பாலையில் அடுக்கி வைத்திருந்த நூல் மூடைகளில் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் வெளியே ஓடி சென்று அக்கம், பக்கத்து குடியிருப்புகளில் இருந்தவர்களிடம் தகவல் அளித்தனர். அவர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜஜெயசிம்மராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நூற்பாலையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 20–க்கும் மேற்பட்ட நூல் மூடைகள், பஞ்சு மூடைகள் மற்றும் இதர பொருட்கள், எந்திரங்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது. தீயில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.