சாத்தூர் அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றவர், வேன் மோதி பலி

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற கட்டிட தொழிலாளி, வேன் மோதி உயிரிழந்தார். அவருடைய மகன்கள் கண் முன் இந்த பரிதாபம் நேர்ந்தது.

Update: 2019-01-01 00:00 GMT
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது42). கட்டிடதொழிலாளி. முருக பக்தரான இவர் கடந்த 6 ஆண்டுகளாக திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வந்தார். இந்த ஆண்டும், சிவகாசியில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் நேற்று முன்தினம் புறப்பட்டார்.

அவரது மூத்தமகனும் கல்லூரி மாணவருமான சந்துரு, 9-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மகன் ஆனந்த் ஆகியோரையும் உடன் அழைத்து வந்தார். பாதயாத்திரை குழுவினர், இரவில் சாத்தூரை அடுத்த ஓடைப்பட்டி பிள்ளையார் கோவிலில் இரவு தங்கினர்.

நேற்று அதிகாலை அனைவரும் பாதயாத்திரையை தொடங்கினர். பொத்துரெட்டிபட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்புறம் வந்த வேன் எதிர்பாராதவிதமாக சுப்புராஜ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவர் தனது மகன்கள் கண் முன்பே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் உடலை பார்த்து அவரது மகன்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சுப்புராஜ் மீது மோதிய வேன் நிற்காமல் சென்றது. அந்த வேனை ஓட்டிச் சென்ற டிரைவர், கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையில் அவர், திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பசாமி(45) என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, சுப்புராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்