வால்பாறையில் பாலத்தில் சென்ற ஜீப் ஓடையில் கவிழ்ந்தது - டாக்டர் பலி; 3 பேர் படுகாயம்

வால்பாறையில் பாலத்தில் சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்தது. இதில், டாக்டர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update: 2018-12-31 23:15 GMT
வால்பாறை, 

கோவை மாவட்டம் ஆனைமலை சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் தியாகராஜன் (வயது 52). இவர் கோவையில் உள்ள பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர், தனது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுடன் வால்பாறைக்கு புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றார். அவரும், குடும்பத்தினரும் வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பங்களாவில் தங்கினர்.

இதனை தொடர்ந்து நள்ளிரவில் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை பார்ப்பதற்காக டாக்டர் தியாகராஜன், தனது மகள் வர்ஷா (20), அண்ணன் பாலசுப்பிரமணி (61), அண்ணன் மகன் சிபிசரண் ஆகிய 4 பேருடன் ஒரு ஜீப்பில் கிளம்பினார். அவருடன் மற்றொரு காரில் உறவினர்களும் சென்றனர்.

ஜீப்பை டாக்டர் தியாகராஜன் ஓட்டினார். வெள்ளமலை எஸ்டேட் டாப்பிரிவு பகுதியிலிருந்து ஊசிமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள பழுதடைந்த பாலத்தின் மீது ஜீப் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஜீப்பில் இருந்தவர்கள் அய்யோ அம்மா, என்று அலறினர். இந்த நிலையில் ஜீப் பாலத்தில் இருந்து அதன் கீழே செல்லும் ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில் டாக்டர் தியாகராஜன் தலையில் அடிபட்டு மயங்கினார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் ஜீப்பிற்கு பின்னால் காரில் வந்து கொண்டிருந்த உறவினர்கள், ஜீப் கவிழ்ந்துகிடப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே டாக்டர் தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்