நிவாரண நிதியை தர அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் கலெக்டரிடம் தொழிலாளி முறையீடு

கஜா புயலில் தென்னை மரம் விழுந்து தந்தை பலியானதால் வந்த நிவாரண நிதியை தர அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என கலெக்டரிடம் தொழிலாளி முறையிட்டார்.;

Update:2019-01-01 04:30 IST
தஞ்சாவூர்,


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் முதியவர்கள், மகளிர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

அப்போது தஞ்சை மாவட்டம் செருவாவிடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான திருப்பதி(வயது45) என்பவர் கலெக்டரிடம் மனுவை அளித்தார். புயலில் என் தந்தை மீது தென்னை மரம் விழுந்து இறந்துவிட்டார். அவருக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வந்துள்ளதாக கூறினர். அந்த நிதியை கேட்டால் லஞ்சம் கொடுத்தால் தான் தர முடியும் என்று கூறுகின்றனர். நிதியை தர முடியுமா? முடியாதா? என அவர், சத்தம்போட்டார். இதனால் கூட்ட அறையில் பரபரப்பு நிலவியது.


உடனே அதிகாரிகள் சிலர் விரைந்து வந்து, அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் நின்ற போலீசாரும் வந்து அவரை கூட்ட அறையை விட்டு வெளியேற்ற முயற்சி செய்தனர். எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை என திருப்பதி ஆவேசமாக கண்ணீர் மல்க கூறினார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். பின்னர் திருப்பதியை போலீசார், கூட்ட அறையை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இது குறித்து அவர் கூறும்போது, கஜா புயலின்போது தென்னை மரம் விழுந்ததில் தந்தை சின்னையன் பலியானார். பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, இறப்பு சான்றிதழை பெற்றேன். திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எப்.ஐ.ஆர். நகல், எனது தந்தையின் இறப்பு சான்றிதழுடன் நிவாரண தொகை கேட்டு விண்ணப்பித்தேன். நிவாரண தொகையும் வந்து இருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை நிவாரண தொகை எனக்கு வழங்கப்படவில்லை. அதிகாரிகளை சந்தித்து கேட்டால் அணுகுமுறை சரியில்லை என கூறுகின்றனர். அதிகாரி ஒருவரின் காலில் கூட விழுந்துவிட்டேன். லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை தான் அணுகுமுறை சரியில்லை என கூறுகின்றனர் என்றார்.


தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா கழனிவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். புகைப்படக்காரர். இவர் பாதி தாடி, மீசை மற்றும் தலைமுடியை எடுத்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர் அவர், கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில், பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் விளைநிலத்தை கட்டப்பஞ்சாயத்து செய்து சிலர் அபகரித்துவிட்டனர். இது தொடர்பாக 781–வது தடவையாக மனு அளிக்கிறேன். என் மனு மீது நடவடிக்கை இல்லையென்றால் வருகிற 26–ந் தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என கூறப்பட்டிருந்தது.


தஞ்சை தெற்குபூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சத்யா(23). 8 மாத கர்ப்பிணியான இவர் தனது தாய் சுமதியுடன் வந்து கலெக்டரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறும்போது, எனது மாமனார்–மாமியாருக்கு 4 பிள்ளைகள். அவர்களில் ஒருவரான எனது கணவருடன் வசித்து வருகிறேன். எங்களை வீட்டைவிட்டு மாமனாரும், மாமியாரும் வெளியே போக சொல்லி வற்புறுத்தியதால் கோவையில் 4 மாதங்கள் வசித்து வந்தோம். ஆனால் அங்கு எங்களால் தொடர்ந்து இருக்க முடியாததால் சொந்த ஊருக்கு வந்து, கணவர் வீட்டில் வசித்து வந்தேன். வீட்டை 4 பேருக்கும் பாகப்பிரிவினை செய்ய வேண்டியது இருப்பதால் எங்காவது போய் இருங்கள் என விரட்டுவதுடன், வரதட்சணையும் கேட்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்