கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2018-12-31 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் ஆவிடைத்தேவன்குளம், காந்தாரி, மறவாதி,பாம்புகனி, இடைச்சி மூலை ஆகிய கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரண தொகை வழங்கவில்லை என்றும், உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரியும் பெருகவாழ்ந்தான் கடை வீதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். அப்போது புயல் நிவாரணம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை தாசில்தார் சந்திரமோகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்