நாங்குநேரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

நாங்குநேரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-31 23:00 GMT
நாங்குநேரி,

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாங்குநேரி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகரப்பஞ்சாயத்து மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நாங்குநேரி 4-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை காலிக்குடங்களுடன் நாங்குநேரி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த நாங்குநேரி போலீசார் மற்றும் நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி குமரேசன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்