வீட்டை சீரமைக்க ரூ.10 ஆயிரத்திற்கு அடகு வைக்கப்பட்ட சிறுவனிடம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை

வீட்டை சீரமைக்க ரூ.10 ஆயிரத்திற்கு அடகு வைக்கப்பட்ட சிறுவனிடம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் விசாரணை நடத்தினார். அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-12-31 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரிக்காடு அண்ணாகுடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது45). கூலித்தொழிலாளி. இவரது வீடு கஜா புயலால் சேதம் அடைந்தது. இந்த வீட்டை சீரமைக்க போதிய வசதி இல்லாததால் தனது 12 வயது மகனை நாகை மாவட்டம் பனங்குடி அருகே சன்னமங்கலத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 ஆயிரத்திற்கு மாரிமுத்து அடகு வைத்தார்.

அங்கு சிறுவன் ஆடுமேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தகவல் அறிந்து நாகை சைல்டு லைன் அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவனை மீட்டனர். அவன் தஞ்சை குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். இந்தநிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தஞ்சைக்கு நேற்று வந்தார்.

அவர், சிறுவனை சந்தித்து என்ன நடந்தது?, படிக்க விருப்பம் இருக்கிறதா? பெற்றோரிடம் செல்ல விருப்பமா? என்பது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவரை கலெக்டர், அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் அண்ணாதுரை யிடம் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதித்த குடிசை வீட்டை சீரமைப்பதற்காக ரூ.10 ஆயிரத்துக்கு அடகு வைக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு தஞ்சை குழந்தைகள் நல காப்பகத் தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். அவன் தனது பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை என தெரிவித்ததோடு, படிக்க விரும்புவதாக கூறினான். இதனால் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்க்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சிறுவனின் பெற்றோரின் வாழ்வாதாரத்திற்கு தஞ்சை கலெக்டர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அரசின் உதவிகள் அந்த குடும்பத்திற்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 33 குழந்தைகள் நல காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 2,430 பேர் தங்கி உள்ளனர். அனைத்து காப்பகங்களிலும் புகார்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனநல ஆலோசகர்களும் குழந்தைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 2014-18 வரை குழந்தைகள் திருமணம் தொடர்பாக 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 77 புகார்கள் விசாரிக்கப்பட்டு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்