மாவட்டத்தில், கடந்த ஆண்டு கொள்ளைபோன ரூ.94 லட்சம் நகைகள் மீட்பு போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தகவல்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு திருட்டு, கொள்ளைபோன ரூ.94 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு (2018), 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் வாகன விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 613-ல் இருந்து 514-ஆக குறைந்துள்ளது.
குற்றம் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதிகப்படியான ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதால் கடந்த ஆண்டை விட குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. கொலை மற்றும் ஆதாய கொலை கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு இணையாகவே இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழிப்பறி வழக்குகள் கடந்த ஆண்டை 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018-ம் ஆண்டு 37-ல் இருந்து 34-ஆக குறைந்துள்ளது. இரவு திருட்டு வழக்குகள் 77-ல் இருந்து 66-ஆக குறைந்துள்ளது. ஒட்டு மொத்த குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதில் 82 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டனர். திருட்டு, கொள்ளை போன ரூ.94 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட 50 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கற்பழிப்பு வழக்குகள் 8-ல் இருந்து 4-ஆக குறைந்துள்ளது. இதேபோல் பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 76-ல் இருந்து 74-ஆக குறைந்துள்ளது. மதுவிற்பனை தொடர்பாக 6 ஆயிரத்து 451 வழக்குகளும், லாட்டரி விற்பனை தொடர்பாக 278 வழக்குகளும், சூதாட்டம் தொடர்பாக 193 வழக்குகளும், மணல் கடத்தல் தொடர்பாக 144 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாட 800 போலீசார் மற்றும் 200 ஊர்காவல் படையினரை கொண்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நேற்று இரவு மாவட்டத்தில் 103 வாகன சோதனை சாவடிகள், 143 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு போலீஸ் பாதுகாப்பு நியமித்தும், 35 இரு சக்கர வாகன ரோந்துகள் மாவட்ட காவல் எல்லைகளில் ரோந்து சென்றும், பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாட காவல்துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த புத்தாண்டு முதல் போலீஸ் நிலையத்துக்கு வரும் மனுதாரரிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டு நிறைவேற்றிட மாவட்ட காவல்துறை சார்பாக உறுதி ஏற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.