திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் - மாணவர்களுக்கு மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள் - 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் கல்வி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் அறிவு திறனை, கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்பிற்கான போட்டிகள் 3-ந் தேதி மற்றும் 4-ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2018-12-31 23:45 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும், முதுநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும் உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முக்கிய பங்காற்றி வருகிறது. இக்கல்லூரி இந்திய பொறியியல் நிறுவனம் (ஐ.இ.ஐ), என்.பி.ஏ மற்றும் டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அங்கீகாரமும் மற்றும் ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச்சான்றிதழை பெற்றுள்ளது.

இக்கல்லூரியின் கணித துறைக்கு ஆராய்ச்சி துறைக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. மேலும், இக்கல்லூரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(எ.ஐ.சி.டி.இ), இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம்(ஐ.எஸ்.டி.இ), இந்திய கணினிக்கழகம்(சி.எஸ்.ஐ) மற்றும் இந்திய பொறியியல் நிறுவனம்(ஐ.இ) ஆகிய தொழில் முறை அமைப்புகளின் கீழ் உறுப்பினராக உள்ளது.

கல்லூரி நிர்வாகம், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் மதிப்பு கூட்டு பயிற்சி இலவசமாக நடத்தி வருகிறது. GA-TE, GRE முதலிய நுழைவுத்தேர்வுகளுக்கு கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் இறுதி ஆண்டு மாணவர்களின் திட்ட வரைவிற்கு சிறந்த திட்ட வரைவு விருது மற்றும் பரிசுத்தொகையும் வழங்கி கல்லூரி நிர்வாகம் மாணவர்களை ஊக்குவிக்கிறது.

மாணவர்களின் வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயிற்சி அளிக்க, வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுதோறும் வளாக தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பிற்கான போட்டிகள் வருகிற ஜனவரி 3-ந் தேதி நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பிற்கான போட்டிகள் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கான போட்டிகள் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

மேலும் மாணவர்கள் பலர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவராக உள்ளனர். அத்தகைய திறனை வெளிப்படுத்த, அவர்களின் திறனை உலகம் அறிய ஓர் சிறந்த வாய்ப்பை இந்த போட்டியின் மூலம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஏற்படுத்தி உள்ளது.

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் பொருட்டு நடத்தப்படும் இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வரும்போது தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் போனபைடு சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும்.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரிய பல கண்கவர் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04639-242482 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்