வளநாட்டில் சாலை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

வளநாட்டில் பாலம் அமைத்து விட்டு சாலை அமைக்காததால் தொடர் விபத்துகள் ஏற்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-31 23:00 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் 4 இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலப்பணிகள் முடிந்து விட்ட நிலையில் பாலத்தை சாலையுடன் இணைக்கும் இடங்களில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்ட நிலையில் சாலை அமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

இதனால், பாலத்தின் அருகே செல்லும் வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்களில் சறுக்கி விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே உடனடியாக சாலை அமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை வளநாடு அருகே பாலத்தை கடக்க சென்ற காரும் ஜல்லிக்கற்களில் சறுக்கி அருகே உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணப்பாறை-பாலக்குறிச்சி சாலையில் வளநாடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். ஜல்லிக்கற் களால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைக்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்