தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு 27.7 சதவீதம் குறைவு போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு 27.7 சதவீதம் குறைந்து உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பீட்டு அளவில் 2017-ம் ஆண்டு 33 கொலை வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 34 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2018-ம் ஆண்டில் சொத்து களவு சார்ந்த குற்ற வழக்குகள் 305-ல் இருந்து 248 ஆக குறைந்துள்ளன. மனிதர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 450-ல் இருந்து 429 ஆக குறைந்துள்ளன.
சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் 4,419-ல் இருந்து 5,208 ஆக அதிகரித்து உள்ளன. சாலை விபத்து வழக்குகள் 1,501-ல் இருந்து 1,443 ஆக குறைந்து உள்ளன. சொத்து களவு சார்ந்த குற்ற வழக்குகளை பொறுத்தவரை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 57 வழக்குகள் குறைந்துள்ளன. சொத்துக்கள் இழப்பு வழக்கின் மதிப்பு 5.4 சதவீதம் குறைந்துள்ளது. திருட்டு வழிப்பறி வழக்குகளில் 84 சதவீதம் துப்பு துலக்கப்பட்டு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மனிதர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொறுத்தவரை 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் 21 வழக்குகள் குறைந்து உள்ளன. 4.6 சதவீத அளவில் குற்றங்கள் குறைந்துள்ளது. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் 789 வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள் நடத்தி உள்ளோம். இதனால் 2017-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2018-ம் ஆண்டில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு 27.7 சதவீதம் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.