நாமக்கல்லில் விவசாயி வீட்டில் 9½ பவுன் நகை திருட்டு
நாமக்கல்லில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகைகள் திருடப்பட்டது.
நாமக்கல்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேந்தமங்கலம் காந்தி புரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் திருமூர்த்தி (வயது 45). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், நகுலன், திசா என 2 குழந்தைகளும் உள்ளனர். நகுலன் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும், மகள் திசா 3-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு வசதியாக நாமக்கல் தில்லைபுரம் 3-வது தெருவில் திருமூர்த்தி குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் திருமூர்த்தி, அவரது மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு சேந்தமங்கலம் சென்றுவிட்டார். அவரது மகன் நகுலன் நாமக்கல்லில் உள்ள அத்தை நிர்மலா வீட்டில் தங்கினார்.
நேற்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிய நகுலன், தில்லைபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டிற்குள் இருந்த 3 பீரோவும் திறந்து கிடந்ததோடு, அதில் இருந்து துணிகளும் சிதறி கிடந்தன.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த நகுலன், இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர். வீட்டின் பீரோவில் இருந்த வளையல், நெக்லஸ், தோடு, மோதிரம் என 9½ பவுன் நகைகள் மற்றும் ரொக்க ரூ.6 ஆயிரம் திருட்டு போயுள்ளதாக விவசாயி திருமூர்த்தி தெரிவித்தார்.