சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறித்த வாலிபர் கைது
சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறித்த சம்பவத்தில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி. இவர் ஏ.மண்டபம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி இரவு இவர், வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது திடீரென கடைக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் முத்துகுமாரசாமியை கத்தியால் வெட்டி, அங்கிருந்த ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் காயமடைந்த முத்துகுமாரசாமி, இது பற்றி கிள்ளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிள்ளை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து, போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அதில், அவர் புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் மகன் ரவி என்கிற ரவிக்குமார்(வயது 24) என்பது தெரியவந்தது. இவர் அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் சேர்ந்து ஏ.மண்டபம் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் முத்துகுமாரசாமியை வெட்டி ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளைடியத்து சென்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் சேர்ந்து பல இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுரேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.