ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் வாக்குவாதம்; இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்

இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-31 00:21 GMT

ஈரோடு,

ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தநகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 28). பெயிண்டர். இவருக்கும், கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெயந்தி (26) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிருஷ்கா (6) என்ற மகளும், கிருத்திகேயன் (1½) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் ஜெயந்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஜெயந்தி இறந்தது குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஜெயந்தியின் உறவினர்கள் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, ஜெயந்தியின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த ராம்கியின் உறவினர்கள் ஜெயந்தியின் சாவில் மர்மம் இல்லை என்றும், அவர் தூக்குப்போட்டு தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறினர். இதனால் ஜெயந்தியின் உறவினர்களுக்கும், ராம்கியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப்பார்த்த மகளிர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்