கீழ்பவானி வாய்க்காலில் அனுமதியின்றி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை; ஒப்பந்ததாரர்கள் அதிகாரியிடம் மனு
பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீன்வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருக்கு ஒரு மனு அளித்துள்ளனர்.
பவானிசாகர்,
உரிய குத்தகை தொகை செலுத்தி பவானிசாகர் அணையில் மீன்பிடித்து வருகிறோம். மேலும் அணையை ஒட்டியுள்ள ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட காலங்களில் மீன் பிடித்து வருகிறோம். மீனவர்கள் மீன் பிடித்து கொடுத்தால் அதற்கு உரிய கூலி கொடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் புங்கார் மீனவர் சங்கத்தை சேர்ந்த மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை எங்களிடம் தரமாட்டோம் என கூறினார்கள். இதைத்தொடர்ந்து புங்கார் மீனவர் சங்கத்தினர் அனுமதியின்றி மீன் பிடிக்கக்கூடாது என ஈரோடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரித்து கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து புங்கார் மீனவர் சங்கத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 டன் அளவிற்கு மீன்களை பிடித்து எடுத்துச்சென்றுவிட்டனர். இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படி அனுமதியின்றி மீன்பிடித்த மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.