சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய எச்.ஐ.வி. ரத்தத்தை கொடுத்த வாலிபர் திடீர் சாவு

சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது தெரியவந்தது.

Update: 2018-12-31 00:08 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது.

அந்த ரத்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் இருந்து தானமாக பெற்றுள்ளனர். அந்த வாலிபர், தனது உறவினர் பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சிவகாசி ஆஸ்பத்திரிக்கு வந்து ரத்ததானம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் வேறு ஒரு இடத்தில் ரத்தபரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்தது தெரிந்து, அதுகுறித்து சிவகாசி ரத்த வங்கிக்கு வந்து கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அந்த ரத்தம் சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டு, இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது.

இதனால் மனவருத்தம் அடைந்த அந்த வாலிபர் தனது சொந்த ஊரில், கடந்த 26–ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர், மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில், டாக்டர் குழுவினர் மூலம் மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த வாலிபர் நேற்று அதிகாலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்த அவர், நேற்று காலை 8 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாலிபர் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள், பிணவறையின் முன்பு திரண்டனர். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வாலிபர் இறந்தது தாங்க முடியாமல் அவருடைய தாயார் கதறி அழுதார். அப்போது அவர் கூறியதாவது:–

எனக்கு மூன்று மகன்கள். அதில் மூத்த மகன்தான் தற்போது இறந்துள்ளான். அவன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பட்டாசு தயாரிக்கும் வேலை செய்து வந்தான். கடந்த 2016–ம் ஆண்டு முதல் ரத்ததானம் செய்து வருகிறான். ஆனால் அவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்தது பற்றி யாரும் அவனிடம் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவன் ரத்தம் கொடுத்துள்ளான். அதன் பின்னர் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்த அவன், அதற்காக மதுரை மேலூரில் ரத்த பரிசோதனை செய்தபோது எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று, தான் தானமாக வழங்கிய ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்று கூறினான். ஆனால் அதற்குள் அந்த ரத்தத்தை சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு வழங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் மன வேதனை அடைந்த அவன் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தான். மன உளைச்சலில் இருந்த அவன் வி‌ஷம் தின்று தற்கொலை செய்ய முயற்சித்தான். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவன், இரவு வரை எங்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தான். ஆனால் காலையில் அவன் இறந்ததை என்னால் நம்பமுடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்