கலெக்டர் வீரராகவ ராவ் தகவல் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு

பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.;

Update: 2018-12-30 23:26 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கண்காணிப்பு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:– தமிழ்நாடு முதல்–அமைச்சர் மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சுற்றுப்புற சுகாதார நலனை பாதுகாக்கும் நோக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள் உள்ளிட்ட 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுஉள்ளது. இதற்கு மாற்றாக துணி பைகள், வாழை இலை, பாக்கு மர தட்டுகள், கண்ணாடி, உலோகத்தாலான குவளைகள், அலுமினியத்தாள், காகித உறிஞ்சு குழாய்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 1–ந்தேதி முதல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கண்காணிக்க 4 நகராட்சிகளுக்கு தலா 2 வீதம் 8 குழுக்களும், 11 யூனியன்களுக்கும் தலா 2 வீதம் 22 குழுக்களும், 7 பேரூராட்சிகளுக்கு தலா 1 வீதம் 7 குழுக்களும் என 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு உள்ளாட்சி அமைப்பு சா£ந்த அலுவலர், ஒரு வருவாய்துறை சார்ந்த அலுவலர், ஒரு உணவு பாதுகாப்புத்துறை சார்ந்த அலுவலர், ஒரு காவல் துறை சார்ந்த அலுவலர் என 4 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் தங்களது பணிகளில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

ஆய்வின் போது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் பாரபட்சமின்றி பறிமுதல் செய்வதோடு, உடனடியாக எச்சரிக்கை நோட்டீசு வழங்க வேண்டும். அதேவேளையில் அரசாணையில் தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்டுள்ள 14 பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்களுக்காக செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கைகளில் எவ்வித சமரசமும் இல்லாமல் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேசுவரன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயற்பொறியாளர் கண்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், உதவி மகளிர் திட்ட அலுவலர் ராஜா முகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்