பயிர் இழப்பீட்டு தொகை ரூ.215 கோடி அனுமதி; அமைச்சர் பாஸ்கரன் தகவல்

மாவட்டத்திற்கு பயிர் இழப்பீட்டு தொகை ரூ.215 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Update: 2018-12-30 23:23 GMT

சிவகங்கை,

மாவட்டத்தில் 2017–18–ம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை பல இடங்களில் குறைவாக வழங்கப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கருத்தாய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வேளாண்மை அலுவலர் கருணாநிதி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:– ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட நிலத்தை தேர்வு செய்து அதில் அதிகாரிகள் எங்கள் முன்னிலையில் கணக்கு எடுத்தனர். அப்போது எங்களிடம் அவர்கள் பயிர் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் 85–ல் இருந்து 95 சதவீதம் வரை இழப்பீடு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

ஆனால் தற்போது 10–ல் இருந்து 12 சதவீதம் வரை தான் இழப்பீடு வந்துள்ளதாக தெரிகிறது. சாதாரணமான ஒரு எக்டேரில் பயிரிட விதை வாங்க மட்டுமே ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது. அப்படி இருக்கும் போது அதைவிட குறைத்து இழப்பீடு வழங்குவது சரியாகுமா?.மேலும் சில இடங்களுக்கு மட்டும் கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியாகத்தான் மழை பெய்துள்ளது. ஒரே மாதிரியாக தான் பயிர் பாதிப்பு உள்ளது. அப்படி இருக்கும் பொது இழப்பீடு வழங்குவதில் மட்டும் எப்பபடி வித்தியாசம் வரும். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே மீண்டும் கணக்கீடு செய்து உரிய முறையில் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், பயிர் காப்பீடு தொடர்பான குறைகள் குறித்த தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். குறைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:– தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ. 215 கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திலேயே முதன் முதலில் நமது மாவட்டத்திற்கு தான் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

பயிர் இழப்பீட்டு தொகை வழங்கியதில் ஒரு சில இடங்களில் முறைகேடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரித்து அரசுக்கு பரிந்துரை செய்து சரியான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்