"சாத்தூர் கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்" அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு நேரில் ஆறுதல் கூறிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Update: 2018-12-30 23:11 GMT

விருதுநகர்,

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரூ.2 லட்சத்திற்கான நிதிஉதவியை அவர் வழங்கினார். பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

யாரோ செய்த தவறுக்கு இந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளார். நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் கண்டிப்பாக வருத்தப்படுவார்கள். சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிக்கும், அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்க முதல்–அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், என்னுடைய சொந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை அந்த பெண்ணின் மருத்துவ செலவிற்காக கொடுத்திருக்கிறேன். அவரது குடும்பத்துக்கு அனைத்து வகையான வசதிகள் செய்து கொடுத்து அனைவரும் மதிக்கும் வகையில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் இதுபோன்று யாருக்கும் நடக்காத வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து தர இருக்கிறோம்.

பல பெண்களுடன் உறவு வைத்து கொள்ளும் இளைஞராக இருந்தால் அவர்கள், யாருக்கும் ரத்தம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. அந்த இளைஞனின் பாவத்தை இந்த அப்பாவி பெண் சுமந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்