விருதுநகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை திடீரென்று ரத்து செய்வதால் பயணிகள் அவதி

விருதுநகரில் இருந்து கிராமப்புறங்களுக்கும், இதர நகர் பகுதிகளுக்கும் இயக்கப்படும் டவுன் பஸ்களை திடீரென்று ரத்து செய்துவிடுவதாலும், நேரத்தை மாற்றி இயக்கப்படுவதாலும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.;

Update: 2018-12-30 23:00 GMT

விருதுநகர்,

விருதுநகரில் இருந்து காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு வசதியாகவும், கிராமப்புறங்களில் இருந்து வேலைக்காக நகர் பகுதிகளுக்கு வந்து செல்லும் கிராம மக்களுக்கு வசதியாகவும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளுக்கு காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் அந்த வழியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பயன்படுவதாக இருந்துவருகிறது.

ஆனால் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்கும் அலுவலர்கள் திடீரென்று ஒருபகுதிக்கு செல்லும் டவுன்பஸ்சை ரத்து செய்துவிட்டு, வேறு பகுதிக்கு மாற்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக கால அட்டவணை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே டவுன் பஸ்களை அனுப்பிவிடும் நிலை உள்ளதால் பஸ்சை நம்பியுள்ள பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படவேண்டிய சாத்தூர் டவுன்பஸ் சில தினங்களில் திடீரென்று ரத்து செய்யப்பட்டு வேறு கிராமத்திற்கு மாற்றம் செய்யப்படுவதும், 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய டவுன் பஸ்சை 20 நிமிடங்களுக்கு முன்பாக அனுப்பிவிடுவதும் வாடிக்கையாக உள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே போக்குவரத்துக்கழக நிர்வாகம் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்குவதற்கும், திடீரென்று ரத்து செய்வதும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக அனுப்பிவைப்பதுமான நடவடிக்கையை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்