கிராம மக்கள் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் இரவோடு இரவாக அகற்றம்

சேதராப்பட்டில் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தை இரவோடு இரவாக போலீசார் அகற்றினர்.

Update: 2018-12-30 23:00 GMT

வில்லியனூர்,

காங்கிரஸ் கட்சியின் 134–ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி கடந்த 28–ந் தேதி சேதராப்பட்டு செங்கழுநீரம்மன் கோவில் எதிரே கொடி கம்பம் அமைத்து, முதல்–அமைச்சர் நாராயணசாமியால் கொடி ஏற்ற காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.

அந்த இடத்தில் பேனர், கொடி கம்பம் வைக்க கிராம பஞ்சாயத்தார் ஏற்கனவே தடை விதித்துள்ளனர். இதை மீறி காங்கிரஸ் கட்சியினர் கொடி கம்பம் வைத்ததால், அதை அகற்றக்கோரி கிராம மக்கள் பத்துக்கண்ணு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்–அமைச்சர் கொடி ஏற்றிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கொடி கம்பம் அகற்றப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கொடி ஏற்றிவிட்டு சென்றும், கொடி கம்பம் அகற்றப்படவில்லை. இதையடுத்து கிராமத்தில் உள்ள மற்ற கட்சியினர் அந்த இடத்தில் கொடி கம்பம் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் அங்கு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதை அறிந்த சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவோடு இரவாக காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தை அகற்றி விட்டனர். ஆனால் கல்வெட்டு அப்படியே உள்ளது. கொடி கம்பம் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்