தேனி மாவட்டத்தில், இந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் 87 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தேனி மாவட்டத்தில், இந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தேனி,
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 36 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் நீதிமன்ற விசாரணையில் இருந்த கொலை வழக்குகளில், 9 வழக்குகள் விசாரணை முடிந்து மொத்தம் 19 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு தூக்குத்தண்டனையும், 15 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேருக்கு தூக்குத்தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 948 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக 154 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இந்த ஆண்டில் 22 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பயன்பாட்டில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண் 100-க்கு 2017-ம் ஆண்டில் 213 அழைப்புகளும், ஹலோ போலீசில் 1077 அழைப்புகளும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டு சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தேனி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100-க்கு 3 ஆயிரத்து 755 அழைப்புகளும், ஹலோ போலீசில் 1,505 அழைப்புகளும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்று ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட இருசக்கர ரோந்து வாகனம் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொது மக்களிடமிருந்து இந்த ஆண்டு 23 ஆயிரத்து 276 மனுக்கள் பெறப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.