அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேச்சேரி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதா? பரபரப்பு தகவல்கள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேச்சேரி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-12-30 23:15 GMT
மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த 27 வயது கூலி தொழிலாளியும், 26 வயது பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை, 2½ வயதில் ஒரு பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர்.

அந்த பெண் முதல் குழந்தையை பெறுவதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு 7 மாத கர்ப்பமாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்காக மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினருடன் சென்றார். அப்போது ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி டாக்டர்கள் ரத்தம் செலுத்தினர். பின்னர் அங்கிருந்து அவர் வீடு திரும்பினார். சில நாட்களிலேயே அவருக்கு உடலில் அரிப்பு, தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் டாக்டர்களிடம் சென்று கேட்டபோது புது ரத்தம் ஏற்றினால் இதுபோன்று தான் இருக்கும், என்று கூறி உள்ளனர். அதற்கு பின்பு அவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் 2015-ம் ஆண்டு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அப்போதும் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரது கணவரையும் அழைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியர் இங்கு ரத்தம் ஏற்றியதால் தான் பாதிப்பு ஏற்பட்டது, இதற்கு டாக்டர்கள், ஊழியர்கள் தான் பொறுப்பு. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம், என கூறினர். அப்போது டாக்டர்களும், ஊழியர்களும் வெளியில் கூறினால் உங்களுக்கு தான் அவமானம் எனவும், அரசு உதவி பெற்றுத்தருவதாக சமாதானம் செய்தும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் 2-வது பெண் குழந்தை பிறந்தது. பிறகு மாதந்தோறும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த விவகாரம் தெரியவந்ததையடுத்து, மேச்சேரி பெண்ணும் பாதிக்கப்பட்டதை வெளியே தெரிவித்துள்ளார். இதுபற்றி எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் தெரிவித்த மேச்சேரி பெண் கண்ணீர் மல்க கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நான் 7 மாதம் கர்ப்பமாக இருந்தபோது பரிசோதனை செய்ய மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எனது சித்தியுடன் சென்றேன். அங்கு பரிசோதனை செய்தபோது எனக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி, மேட்டூரில் இருந்து ரத்தம் கொண்டு வந்து ஏற்றினர். இதைத்தொடர்ந்து எனக்கு ஒருவாரத்திற்கு மேல் உடம்பெல்லாம் அரிப்பாக இருந்தது. இதுபற்றி டாக்டரிடம் கூறினேன். அப்போது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து விட்டு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறது, என கூறினர்.

இதனை உறுதிப்படுத்த சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்த மாதிரியை அனுப்பி வைத்து உறுதிபடுத்தினர். இதைகேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அதன்பிறகு எனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் ரத்த பரிசோதனை செய்தோம். எனது குழந்தைகளுக்கு பாதிப்பில்லை. ஆனால் எனது கணவருக்கு எச்.ஐ.வி. இருக்கிறதா? என உறுதிபடுத்த முடியவில்லை. எனவே அரசு எங்களுக்கு சென்னையில் வைத்து முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ரத்தம் செலுத்திய அரசு மருத்துவ டாக்டர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மேலும் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பெண்ணின் கணவர் கூறும்போது, தவறு செய்த டாக்டர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்