தலைவாசல் அருகே பஸ் மீது கார் மோதியதில் டிரைவர், 3 பேர் படுகாயம் சென்னையை சேர்ந்தவர்கள்
தலைவாசல் அருகே பஸ் மீது கார் மோதியதில் சென்னையை சேர்ந்த டிரைவர் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலைவாசல்,
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 27). கார் டிரைவர். இவருடைய மனைவி ரேவதி (25). செந்தில்குமாரின் நண்பர் யோகநாதன் (27), கவிப்பிரியா (28) ஆகிய 4 பேரும் ஒரு காரில் சென்னையில் இருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கார் சேலம் மாவட்டம் தலைவாசல் சாமியார்கிணறு பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது திடீரென கார் மோதியது. பின்னர் அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். செந்தில்குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.