விவசாய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திவிட்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம் நல்லசாமி பேட்டி

விவசாய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி விட்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

Update: 2018-12-30 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளருமான நல்லசாமி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்கும் வகையில் உள்ளது. இது குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்களை அழைத்து விவாதிக்க வேண்டும். மேலும் காவிரி தீர்ப்பை திருத்தக்கோரி மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

கர்நாடகம் தமிழகத்திற்கான உரிமையான காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் திறக்க வேண்டும் என்ற அம்சம் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும் வரை காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்திவிட முடியாது. தினந்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம் பெற்றால் மட்டுமே பிரச்சினை தீரும். இது இரு மாநில மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும.

வரம்புமீறி நிலத்தடி நீரை தொடர்ந்து எடுத்து வந்தால் தமிழகம் பாலைவனம் ஆகும். பல நாடுகளில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த தடையும் இல்லை. இப்போது தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். எனவே நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு படிப்படியாக தடை விதிக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் கள் இறக்கவும், பருகவும் தடை உள்ளது. கள் தடையை நீக்க கோரி 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். கள்ளுக்கான தடையை நீக்க கோரி கோவை, சென்னையில் 3 முறை அசுவமேத யாகம் நடத்தப்பட்டன. தற்போது 4-வது முறையாக சென்னையில் அசுவமேத யாகத்தை வருகிற 21-ந்தேதி(திங்கட்கிழமை) நடத்த உள்ளோம். கள் ஒரு தடை செய்ய வேண்டிய போதைப்பொருள் தான் என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு போதுமானது அல்ல. மத்திய குழு ஆய்வு நடத்தியது நிவாரணம் வழங்குவதை தள்ளிப்போடுவதற்கு தான். தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. கட்டுமானத்துக்கு ஆற்று மணலை பயன்படுத்தக்கூடாது. எனவே மணல்குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விவசாய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திவிட்டு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பயிர் காப்பீடு போன்ற சலுகைகள் வழங்குவதை ரத்து செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்