ஓடும் பஸ்சில் பயணியிடம் கைப்பை திருட்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது
ஓடும் பஸ்சில் பயணியிடம் கைப்பையைத் திருடிய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காட்டுக்காநல்லூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மனைவி நளினி (வயது 51). இவர்களுடைய மகள் சென்னையில் உள்ளார். மகளை பார்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்குச் செல்ல முடிவு செய்தனர்.
அதற்காக ஊரில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று பகலில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்குச் செல்ல, ஒரு தனியார் பஸ்சில் ஏறினர். ஓடும் பஸ்சில் நளினியின் அருகில் 3 பெண்கள் அமர்ந்திருந்தனர். நளினி தனது கைப்பையை மடியில் வைத்திருந்தார். அந்தக் கைப்பையில் ரூ.3 ஆயிரம் இருந்தது.
காட்பாடி சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்றபோது, நளினியின் கைப்பையைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரிடம் கூறினார். அந்த நேரத்தில், நளினியின் அருகில் அமர்ந்திருந்த 3 பெண்களும் பஸ்சை நிறுத்தி அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
அந்தப் பெண்கள் மீது சந்தேகமடைந்த நளினியும், திருநாவுக்கரசும் ஓடும் பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கி 3 பெண்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அதில் ஒரு பெண், நளினியின் கைப்பையை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. கைப்பையை பார்த்த நளினி, அதனை அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றினார்.
ஓடும் பஸ்சில் தன்னிடம் இருந்து எப்படி கைப்பையைத் திருடலாம்? உங்களுக்கு என்ன அவ்வளவு துணிச்சல்? எனக் கேட்டு நளினி அவர்களிடம் கடும் தகராறில் ஈடுபட்டார். கைப்பையைத் திருடிய 3 பெண்களை, அப்பகுதி மக்களின் உதவியோடு பிடித்து, விருதம்பட்டு போலீசில் ஒப்படைத்து, அவர்கள் மீது புகார் செய்தார்.
போலீசார், 3 பெண்களிடம் விசாரித்தனர். அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மனைவி அலமேலு (25), கணேசனின் மனைவி சாந்தி (46), விக்ரமின் மனைவி கவிதா (29) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.