நாளை முதல் தடை எதிரொலி: பொதுமக்கள், வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சேலத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வருகிறார்கள்.
சேலம்,
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை நாளை புத்தாண்டு (செவ்வாய்க்கிழமை) முதல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து அவர்களது பகுதிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகம், தொழிற்கூடங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தங்களது பகுதிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் இன்றுக்குள் (திங்கட்கிழமை) ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சேலம் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அட்டைப்பெட்டிகளில் சேகரிக்கும் நிகழ்ச்சி சேலம் பழைய பஸ்நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது, பொதுமக்களும், வியாபாரிகளும் தாங்களாகவே முன்வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்களை போட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், கடை மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று அட்டைப்பெட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்களையும், கழிவுகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறுகையில், சேலம் மாநகராட்சியில் மண்டலம் வாரியாக சூரமங்கலத்தில் 201 இடங்கள், அஸ்தம்பட்டியில் 208 இடங்கள், அம்மாபேட்டையில் 260 இடங்கள், கொண்டலாம்பட்டியில் 240 இடங்கள் என மொத்தம் 909 இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் வகையில் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் வழங்கலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முறையாக அப்புறப்படுத்தப்படும். கூடுதலாக பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள், மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகமே பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும், என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் ஜெயராஜ், உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.