கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் மோதி நின்ற ஜீப் - போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நடைபாதையில் மோதி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
கர்நாடகா- கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக தினமும் ஊட்டிக்கு அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் மைசூர் பகுதியில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரிகளில் அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரமாக கூடலூர் திகழ்கிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறையால் நீலகிரியில் சீசன் களை கட்டி உள்ளது.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன்கள், பஸ்களில் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் வழிமுறைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து வரும் சுற்றுலா கார்கள், வேன்கள் 52 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடலூரில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன.
இதனால் கூடலூரில் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. இதுமட்டுமின்றி கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலை இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சாலையை கடந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை வேகமாக இயக்கி வருகின்றனர். இதனால் பல வாகனங்கள் விபத்துகளில் சிக்கி விடுகிறது. சீசன் காலத்தில் இரவு 9 மணிக்கு கூடலூர்- மைசூரு சாலையை மூடுவதை கைவிட வேண்டும் அல்லது நேரத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இவ்வாறு பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஊட்டியில் இருந்து மைசூருக்கு சென்ற ஜீப் ஒன்று கூடலூர் ஸ்டேட் வங்கி அருகே கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வங்கிக்கு செல்லும் பாதையில் ஜீப்பை டிரைவர் ஓட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மற்றொரு பக்கம் வாகனங்கள் எதிரே வரும் பாதையில் ஜீப் சென்றது.
இதைக்கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இருப்பினும் சாலையோர நடைபாதையில் மோதி ஜீப் நின்றது. மேலும் பொதுமக்களும் ஓடி வந்து ஜீப்பை பிடித்து தடுத்தனர். இதனால் வேறு வாகனங்கள் மீது ஜீப் மோத வில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே ஜீப் நடுரோட்டில் நின்றதால் கோழிக்கோடு, மைசூரு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுவில் நீண்ட வரிசையில் தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து திருப்பி விட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஜீப் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை 6 மணியளவில் அதே பகுதியில் ஊட்டியில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற ஒரு சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதை பார்த்த பொதுமக்கள் வேனின் டயர்களுக்கு இடையில் பெரிய கற்களை வீசி நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் விபத்துகள் தினமும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் புதியதாக வைத்த தடுப்பு சுவர்களால் போக்குவரத்தை மாற்றி விட முடிய வில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.