நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகைக்காக மண்பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்ய மண் பானைகள் தயாரிக் கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2018-12-30 23:00 GMT
நாமக்கல், 


பொங்கல் பண்டிகை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மண் பானையில் வைக்கும் பொங்கலும், தித்திக்கும் செங்கரும்பும் தான். அந்த வகையில் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தில் மண் பானைக்கு என்றைக்கும் தனி இடம் உண்டு. இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், அதற்காக மண் பானை தயாரிக்கும் பணியும் பரவலாக தீவிரம் அடைந்துள்ளது.

நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்காநத்தம் கிராமத்தில், பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக மண்பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 5 விதமான அளவீடுகளில் தயாரிக்கப்படும் பானைகள் குறைந்த பட்சம் 70 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பானைகளை, நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்ய வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள பொன்னுசாமி கூறியதாவது:- பானைகளை தயாரிக்க தேவைப்படும் மண்ணை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் இந்த தொழிலை செய்ய முடியாத நிலை உள்ளது. பண்டிகை காலத்தில் மட்டும் பானைகளை தயாரித்து வருகிறோம். மீதமுள்ள நாட்களில் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது.

மக்கள் மத்தியிலும் பானைகளில் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பானைகளின் தயாரிப்பு விலை கூட சில நேரங்களில் கிடைப்பதில்லை. இத்தகைய தொழிலை அரசு அங்கீகரித்து, மண்ணை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்தால் பானை தயாரிக்கும் தொழில் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்