ஆரல்வாய்மொழி விபத்து: மேலும் ஒரு வாலிபர் பலி

ஆரல்வாய்மொழி அருகே நடந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலியானார். இதனால், சாவு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

Update: 2018-12-30 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் டேனியல், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் எபி கிப்சன் (வயது 22), டிப்ளமோ என்ஜினீயர். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சலீன்குமார்(24). இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள காற்றாலையில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு எபி கிப்சன், நண்பர் சலீன்குமாருடன் மோட்டார் சைக்கிளில் காவல் கிணறுக்கு டீ குடிக்க சென்றார். இருவரும் அங்கு டீ குடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அவர்கள், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் மோட்டார் சைக்கிள் ஒரு பக்கமாக இழுத்து சென்றது. எபி கிப்சன், சலீன்குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் எபி கிப்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சலீன்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சலீன்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது பிணம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்