தர்மபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.150 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெற இலக்கு சிறப்பு நோக்கு முகாம் இன்று நடக்கிறது

தர்மபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.150 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு நோக்கு முகாம் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

Update: 2018-12-30 22:00 GMT

தர்மபுரி,

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வருகிற 23, 24–ந்தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களை பங்கேற்க செய்யவும், தொழில் முதலீடுகளை திரட்டவும் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக வெளி நாடுகளிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு சிறப்பானதாக கருதப்படுகிறது.

மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அதிகப்படியான முதலீடுகளை திரட்ட அதிக அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நோக்குமுகாமை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உள்ள வாய்ப்புக்களை துடிப்புள்ள தொழில் முனைவோருக்கு எடுத்து செல்லுதல், வருங்கால தொழில் முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் ஆகியவை இந்த முகாம்களை நடத்துவதன் முக்கிய நோக்கமாகும்.

உலக முதலீட்டாளர் மாநாட்டையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெற்று பல்வேறு துறைகளில் தொழில்களை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.125 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. தொழில்முனைவு நடவடிக்கைகள் குறித்து தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நோக்கு முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி நடக்கிறது.

இந்த முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்க பிரதிநிதிகள், தொழில் நிறுவன முதலீட்டாளர்கள், வங்கி அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த முகாமில் தொழில்கள் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முதலீட்டாளர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு விரைவில் தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இந்த சிறப்பு நோக்கு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்