காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; கட்டிட மேஸ்திரி பரிதாப சாவு உறவினர் படுகாயம்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-12-30 22:30 GMT

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்ன மொரசுப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது52). இவரது உறவினர் காமராஜ்(40). கட்டிட மேஸ்திரிகள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நெடுங்கல் கிராமத்திற்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை காமராஜ் ஓட்டி சென்றார். சின்னசாமி பின்னால் அமர்ந்து சென்றார்.

காரிமங்கலம் அருகே உள்ள அகரம் பிரிவு ரோட்டை அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி மற்றும் காமராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று கொண்டு மேல் சிகிச்சைக்காக 2 பேரையும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரையும் மீண்டும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னசாமி, நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். காமராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்