கவர்னர் கிரண்பெடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு விரைவில் முடிவு நாராயணசாமி உறுதி

கவர்னர் கிரண்பெடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-12-30 00:13 GMT
புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை அரசுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய நிதி முழுமையாக கிடைக்காவிட்டாலும், மாநிலத்தில் முட்டுக்கட்டைகள் இருந்தாலும் நானும் அமைச்சர்களும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இதன் காரணமாக 17 சிறிய மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரி முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வியில் இந்திய அளவில் 5-வது இடத்திலும் உள்ளது. புதுவை மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சுகாதாரத்தில் சிறப்பான இடத்துக்கான பரிசினையும் பெற்றுள்ளன.

மத்திய அரசு கொடுக்கும் 26 சதவீத நிதியை கொண்டு மாநிலத்தின் வருமானத்தை பெருக்கி நிர்வாகம் செய்து வருகிறோம். 2019-ம் ஆண்டில் மாற்றம் வரும். நமக்கான தடைகள் நீங்கும் வாய்ப்பும் உள்ளது. 5 மாநில தேர்தலுக்குப்பின் அந்த நம்பிக்கை வந்துள்ளது.

கவர்னர் கிரண்பெடி தனது அலுவலகத்தை இப்போது கவர்னரின் செயலகம் என்று அறிவித்துள்ளார். அது கவர்னரின் அலுவலகமே தவிர செயலகம் என்ற அங்கீகாரம் கிடையாது. நமது மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயலகங்கள் இரண்டு தான் உள்ளது. ஒன்று தலைமை செயலகம். மற்றொன்று சட்டமன்ற செயலகம். அரசின் ஒப்புதல் இல்லாமல் கவர்னரின் செயலகம் என்று கூறுவது விதிமுறைகளை மீறிய செயல். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகிறார் என்று கடிதங்கள் மூலம் தெரிவித்தேன்.

இப்போது கவர்னர் தனது அலுவலகத்தை தேர்வு மையமாக மாற்றி உள்ளார். அதிகாரிகளை அழைத்து அவர் தேர்வு எழுத கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெற தேர்வு நடத்த தனி அமைப்பு உள்ளது. அப்படியிருக்க கவர்னர் எதற்காக தேர்வு நடத்தினார்? தேர்வு நடத்தும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? அந்த தேர்வின் பலன் என்ன? கவர்னர் சான்றிதழ் கொடுத்தாலும் அதை துறை அங்கீகரிக்குமா? அவர் போடும் கையெழுத்து செல்லாது.

நான் அவரவர் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். ஆனால் அவர் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இதற்கு விரைவில் முடிவுகட்டப்படும்.

முதல்-அமைச்சர்களாக ரங்கசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இருந்த காலம் முதல் புதுவையில் பொங்கல் பண்டிகையின்போது இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இந்த ஆண்டு கோப்பு அனுப்பியபோது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச பொருட்கள் வழங்குமாறு கருத்துகளை பதிவு செய்து உள்ளார். ஆனால் நான் பொங்கல் பொருட்கள் கொடுப்பதை எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளார். அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்கும் கோப்பினை மீண்டும் கவர்னருக்கு அனுப்புகிறோம்.

இதேபோல் மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அனுப்பிய கோப்பினையும் திருப்பி அனுப்பிவிட்டார். வருகிற 2-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இதுகுறித்தும், பிளாஸ்டிக் தடை குறித்தும் விவாதிக்கப்படும்.

மேலும் வருகிற 4-ந்தேதி மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் முன்பு டெல்லி சென்று கோரிக்கை வைத்துள்ளோம். இப்போது கவர்னரை திரும்பப்பெறவும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

மேலும் செய்திகள்