கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்,
மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிவரக்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அம்மா பேரவையின் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தவசி, தமிழரசன், வெற்றிவேல், இளங்கோவன், புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழழகன், ஆண்டிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, திருமங்கலம் என்றும் அ.தி.மு.க.வின் கோட்டை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் ஒரு போலியான வெற்றியை தான் பெற்றார்கள். ஆனால் அதற்கு பின்பு நடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை தான் பெற முடிந்தது. அ.தி.மு.க.வை வீழ்த்த எவராலும் முடியாது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருக்கும் போது கருணாநிதி என்ற வலுவான எதிரி இருந்தார். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஸ்டாலின் அ.தி.மு.க.வுக்கு தகுதியில்லாத எதிரி. ஸ்டாலின் நமக்கு நாமே என்று ஊர் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்த்தார். ஆனால் எதுவும் எடுபடவில்லை. கருணாநிதி இருக்கும் போதே எடுபடாத அவரது சுற்றுப்பயணம் இப்போதும் எடுபடாது. செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி. அவர் போகாத கட்சியே கிடையாது என்றார்.
பின்னர் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது கூறியதாவது:-
இந்த 22 மாத ஆட்சி காலத்தில் சரித்திர சாதனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படைத்துள்ளார். அவருக்கு உறுதியாக துணை முதல்-அமைச்சரும் இருந்து வருகிறார். அவர்கள் வகுத்து அளித்துள்ள தேர்தல் உத்திகளை கையாண்டு எதிரிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எத்தனை எதிரிகளும், உதிரிகளும் சாதியின் பெயரிலோ, மதம், இனத்தின் பெயரிலோ வந்தாலும் அதனை ஜெயலலிதாவின் பெயரை சொல்லி விரட்டி அடித்து அணிவகுத்து நின்று கழகத்தை கட்டிக்காக்க வேண்டும். தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மக்களிடத்தில் பலமாக சென்று இருக்கிறது. சாமானியரான முதல்-அமைச்சர் வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார். மக்களிடம் அ.தி.மு.க.விற்கு உள்ள செல்வாக்கை திசை திருப்ப எத்தனையோ முயற்சிகளை ஸ்டாலின் எடுத்து வந்தார். அந்த முயற்சிகளில் இந்த கிராம சபை கூட்டமும் ஒன்று. அரசு சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பார்கள். அங்கு மக்களின் கோரிக்கை உடனடியாக செய்து கொடுக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.